ஏழை மாணவ, மாணவிகளின் மேல்நிலைக் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பேருக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த என்.எம்.எம்.எஸ்., (NMMS - National Means cum Metric Scholarship) தேர்வானது வருடந்தோறும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 50 மாணவர்களுக்கும், 50 மாணவிகளுக்கும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.12 ஆயிரம் மத்திய அரசால், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
தகுதி
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தகுதியானவர்கள். மேலும் இந்தத் தேர்வில் பங்கேற்க, மாணவரின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.1.5 லட்சம் இருப்பதுடன், ஏழாம் வகுப்பின் முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முடிய 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.48 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை பெறமுடியும். பணம் அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் இத்தேர்வில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் தேர்வு முடிவுகளானது வருடந்தோரும் மார்ச் மாதத்தில் வெளியாகும்.
தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது எப்படி?
பாடதிட்டம்:
முந்தைய வகுப்பு பாடத்திட்டங்கள் மற்றும் பொது அறிவு சார்ந்த கேள்விகள், இந்தத் தேர்வில் இடம்பெறும்.
90 மதிப்பெண்ணிற்கு மனத்திறன் தேர்வு, 90 மதிப்பெண்ணிற்கு படிப்பறிவு திறன் தேர்வு என 2 வகையான தேர்வுகள் நடந்தப்படும்.
எட்டாம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல், கணிதம் தொடர்பான பாடத்திட்டங்களுக்கான வகுப்புகள், மனத்திறன் தேர்வு மற்றும் படிப்புத்திறன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் விபரங்களைக்கு:
https://scholarships.gov.in/public/schemeGuidelines/NMMSSGuidelines.pdf
http://www.dge.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறை:
1. NMMS தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
தலைமையாசிரியர்கள் தேவையான விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
2. தலைமை ஆசிரியர்கள், விண்ணப்பங்களை நடப்புக் கல்வியாண்டில் எட்டாம் வகுப்புப் பயின்று வரும் தகுதியுடைய மாணவர்களிடம் கொடுத்து, பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.
3. புகைப்படம் ஒட்டிப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தேர்வர்கள், தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50/- உடன் குறிப்பிட்ட தேதிக்குள் ஒப்படைத்தல் வேண்டும்.
4. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் இணையதள முகவரி குறித்தான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
5. பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய நாட்கள் குறித்த விவரம் பெறப்பட்டவுடன், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அருகிலுள்ள வட்டார வள மையங்களின் (BRC) உதவியுடன் இணையதள வசதி கொண்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தங்கள் பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகப் பதிவு செய்தல் வேண்டும்.
6. தலைமையாசிரியர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்தபின் அனைத்து விண்ணப்பங்களையும் ஒரே கட்டமாகவும் , மொத்தத் தேர்வுக் கட்டணத்தையும் ரொக்கமாக, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள் குறித்தும் பின்னர் தெரிவிக்கப்படும்.
7. காலதாமதமாகப் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் கட்டாயமாக நிராகரிக்கப்படும். புறச்சரகப் பதிவெண் கொண்டு தேர்வெழுதத் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
2024 ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப பதிவு நவம்பர்/டிசம்பர் 2023ல் நடைபெறலாம்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.