தலைவி!!
"அம்மா காஃபி" என்றாள் அனு,
"அம்மா எனக்கு டீ தான்
வேணும்" என்றான் அருண்.
"சரி சரி உங்க அப்பாவுக்கு ஓட்ஸ் கஞ்சி குடுத்துட்டு வரேன்"
என்ற பத்மா வேகவேகமாக இயங்கி
வேலைக்கு செல்லும் மகனுக்கும்,
காலேஜ் செல்லும் மகளுக்கும்
கேட்டத்தை கொடுத்துவிட்டு
ஐந்து நிமிடம் உட்காரலாம் என்று
வந்து சோஃபாவில் அமர்ந்தாள்.
வயிற்றில் பசி கிள்ளியது. சாப்பிடலாமா என்று ஒரு மனம் நினைக்க, இன்னும் எத்தனை எத்தனை வேலைகள் வரிசை
கட்டி நிற்கின்றது என்ற எண்ணம்
வந்து அதை தடுத்தது.
எல்லோருக்கும் கொடுத்தது போக
மீதமிருந்த ஆறிய காஃபியை
தூக்கி வாயில் ஊற்றி கொண்டு
மீண்டும் வேலையை தொடர்ந்தாள்.
தினமும் கணவன் நாகராஜனுக்கு காலையில் ஓட்ஸ், மதியம் கீரை, சப்பாத்தி, ஒரு பொறியியல் இவை அனைத்தும் கூடிய சாப்பாடு.
மாலையில் பிஸ்கட், டீ
வாக்கிங் சென்று விட்டு
வருவதற்குள் ஏதாவது ஒரு சிற்றுண்டி தயாரித்து வைத்திருக்க வேண்டும், இல்லை என்றால்
வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்.
வளர்ந்த பிள்ளைகள் இருந்தாலும்
தனி அறையில் தான் படுக்கை,
வெட்கமாக இருந்தாலும்
கணவன் வேற்று மனைக்கு போகிவிடக்கூடாது
என்பதால் பொறுத்துக் கொண்டாள்.
ஒருநாள் சமையல் செய்யும் போது தலைசுற்றி மயக்கம் வரும்போல்
இருக்க மெதுவாக கணவனை
அழைத்துச் சொன்னாள்,
அதற்கு "தல சுத்தலுக்கெல்லாம் பயமா? சரி, எனக்கு கொஞ்சம் சுக்கு கசாயம் வச்சுகுடு தொண்டை
லேசா கரகரன்னு இருக்கு" என்று
கட்டளை இட்டு சென்றான்.
தனக்கென்று வந்தால் லேசானதுகூட கவனிக்கப்பட வேண்டியதாகிறது.
எனக்கென்று வந்தால் கவனிக்க படவேண்டியது கூட லேசானதாகிப்போகிறது இவருக்கு
என்று நினைத்தபடியே வேலையை
தொடர்ந்தாள்.
இப்படி முடியாமல் வேலை
செய்து செய்து சோர்ந்து போன நேரத்தில் மகனுக்கு திருமண பேச்சு ஆரம்பித்ததில் மனம் மகிழ்ந்து போனது, மருமகளை மகள் போல்
பார்த்துக்கொண்டால், அவள் என்னை தாயாக நினைத்து
முடியாத போது தாங்குவாள் என்று நினைத்துக்கொண்டு வேகமாக செயலில் இறங்கினாள்.
மகனுக்கு திருமணம் முடிந்து
ஆறு மாதங்கள் போனதே தெரியவில்லை.
இனி புதிய மருமகள் பழைய மருமகளாக மாறி வேலை செய்வாள் என்று எதிர்பார்த்து காத்திருக்க,
அவளோ, பத்மா தரும் காபிக்கு
கால்மேல் கால் போட்டு கொண்டு காத்திருந்தாள்.
நொந்து போன மனம்
உடம்பு என்ற வண்டியை இழுக்க முடியாமல் இழுத்தது.
இப்போதெல்லாம் ஏனோ அடிவயிற்றில் வலி, அதோடு இடுப்பு
வலியும் சேர்ந்து கொள்கிறது,
எதைப்பார்த்தாலும் கோபமும், ஆத்திரமும் வருகிறது.
அடிக்கடி மனச்சோர்வு வேறு,
யாரிடம் சொல்வது?
யாருக்கு தான் நேரம் இருக்கிறது நான் சொல்வதைத் கேட்க!
மனதில் ஒரு வெறுமை வந்து ஒட்டிக் கொண்டது.
அந்தநேரம் எதிர்வீட்டு தாயம்மாள்
பசும்பால் கொண்டுவர
அவளே கேட்டாள் "ஏன்மா ஒரு மாதிரியா இருக்குற?" என்று,
மனதில் இருந்ததை சொல்ல
"அது நிக்கற நேரம்
அதான் அப்படி!" என்றாள்.
ஒரு வேளை அப்படியும் இருக்கலாம்
என்று வலியோடு நாட்களை
கடத்தினாள்.
ஒருநாள் படுக்கையை விட்டே
எழ முடியவில்லை மகளை அழைக்க, "இன்னைக்கு காலேஜ்டே நீ தயவுசெஞ்சு சீக்ரமா எனக்கு சாப்பிட ஏதாவது செஞ்சுகுடு"
"என்னால முடியலைடி"
"ஆமா நான் அழகா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு காலேஜ் போலாம்ன்னு நெனச்சா நீ என்னம்மா இப்படி பண்ற?"
"சரிசரி கத்தாத உங்கப்பா அதுக்கு வேற எதையாவது சொல்லப்போறாரு" என்று எழுந்து
அன்றைய வேலைகளை முடித்து
படுத்தவளுக்கு உடம்பு ஏதேதோ
செய்தது.
மகனிடம் சொன்னாள்,
அவனுக்கு நேரம் இல்லை என்றவன், தந்தையிடம் டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று கொஞ்சம் அக்றையோடு
சொல்லிவிட்டு சென்றான்.
மாலை எப்போது வரும் என்று
காத்திருந்தாள், மீண்டும் தலைசுற்ற
படுத்தவள்தான் லேசாக நினைவுவர, கண்விழித்து பார்த்தாள்.
அது மருத்துவமனை,
பக்கத்தில் யாரோ ஒருடாக்டர் பேசுவது கேட்டது "என்னங்க நாகராஜன் இவ்வளவு கேர்லஸ்ஸா இருந்திருக்கிங்க? அவங்க என்ன
மனுஷியா இல்ல மிஷினா?
அவங்களுக்கு இப்போ எடுத்த
டெஸ்ட்ல சுகர், பிபி, கொலஸ்டிரால் எல்லாம் இருக்கு, அப்புறம் யூட்ரஸ்ல ப்ராப்ளம், தைராய்டு அதிகமா இருக்கு, ரத்தம் கம்மியா, ஊட்டச்சத்து குறைபாடா இருக்கு.
அவங்க உங்ககிட்ட எதுவுமே
சொல்லையா? இல்ல நீங்க
கவனிக்கலையா? நீங்க எல்லாம்
அவங்களபத்தி கவலையே படாம
உங்க உடம்ப மட்டும் பத்திரமா,
அக்ரையா பாத்துகிட்டு, அவங்கவங்க சுகம் முக்கியம்ன்னு இருந்திருக்கிங்க.
ஏங்க வருஷத்துக்கு ஒரு முறையாவது அவங்கள டாக்டர்கிட்ட
காட்டவேணாமா? இப்போ அவங்கள
நான் எப்படி சரிபண்ணி, எத்தனை நாளைக்கு இங்கேயே கவனிச்சி...!!
ஹும்...! ஒண்ணும் புரியலை"! என்று சொல்வதைத் கேட்டுக் கொண்டே, அதற்கெல்லாம் அவசியம் இல்லாமல்
"பத்மா" காற்றில் கரைந்தே போனாள்.
யாருக்கும் எந்த குற்ற உணர்வு மில்லாமல், இதெல்லாம் ஒரு
குடும்ப "தலைவியின்" கடமைதானே? என்று நினைத்து கொஞ்சம் வருத்தப்பட்டுவிட்டு வேலையை தொடர்ந்தனர்.
சாப்பிடும் வேளையில் எப்போதாவது அவளின் நினைவு வந்துபோனது எல்லோருக்கும்!
இப்போது அவர்கள் வீட்டில் எல்லாம்
ஒழுங்காய் நடக்கின்றது.
மருமகள் வேறுவழியின்றி சமைக்க, மாமனார், அவள் என்ன செய்தாலும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட, மகன் சமையலறையில் மனைவிக்கு ஒத்தாசை செய்ய...
மகள் அவள் வேலைகளை
அவளே செய்துகொள்ள நாட்கள் சுறுசுறுப்பாக நகருகிறது...
இதையெல்லாம் கண்ணாடி சட்டத்தின் உள்ளே இருந்து
பார்த்த பத்மா என்ற அந்த குடும்பத்தின் "தலைவி"
இப்படி நான் இருக்கும்போது
ஏன் இல்லை என்று யாருக்கும் கேட்காத குரலில் எல்லோரையும் கேட்டுக்கொண்டே இருந்தாள் பரிதாபமாக!!
எங்கே கேட்கும் அவள் குரல்?
யாருக்கு கேட்கும் அவள் குரல்?
குடும்ப உறுப்பினர்களுக்கு:
நம் குடும்பத்தை தாங்கும்
தலைவியின் தலையில் எல்லா
பாரத்தையும் போட்டுவிட்டு
நாம் சுகமாக இருக்க விரும்புகிறோம்.
அவளும் ஒரு சாதாரண மனுஷி தான், அவளுக்கும் ஆசாபாசங்கள்,
வேதனை வலிகள் இருக்கும்.
புரிந்து கொண்டு நம் ஆரோக்கியம் காக்கும் குடும்ப தலைவியை
நாம் காப்போம், அதனால் ஆரோக்கியமான நாடாக நம்நாட்டை
மாற்றுவோம்.
ஏனென்றால் ஒரு வீடோ, நாடோ அதற்கு ஆதாரமாக இருப்பது பெண்களே!!
நன்றி... 🙏🙏🙏
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.