ஒரு காடு. அந்தக் காட்டில் ஒரு காக்கை இருந்தது. ஓர் எலி இருந்தது. ஒரு மான் இருந்தது. ஓர் ஆமை இருந்தது. இந்த நான்கும் நண்பர்கள்.
ஒரு நாள் மேயப்போன மான் திரும்பி வரவில்லை. ரொம்ப நேரம் ஆகியும் வரவில்லை. காக்கையும், எலியும், ஆமையும், “மான் எப்போது வரும்? எப்போது வரும்?” என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தன. மான் வரவே இல்லை!
மானைத் தேடி காக்கை புறப்பட்டது. இங்கும் அங்கும் பறந்தது. கடைசியாக மானைக் கண்டுபிடித்துவிட்டது. ஆனால், பாவம், மான் ஒரு வலைக்குள் சிக்கிக் கிடந்தது!
மான் பக்கத்திலே காக்கை போனது. “ நண்பா கவலைப்படாதே. நான் உடனே போய், எலியைக் கூட்டிக்கொண்டு வருகிறேன். அது இந்த வலையை அறுத்து உன்னைக் காப்பாற்றிவிடும்” என்றது. உடனே எலியும் ஆமையும் இருந்த இடத்துக்குக் காக்கை பறந்து போனது. தான் பார்த்ததைச் சொன்னது. அதைக் கேட்டதும், “ஆ…, அப்படியா, வா உடனே போகலாம்” என்றது எலி.
காக்கை, எலியை முதுகிலே தூக்கிக்கொண்டு பறந்தது. இரண்டும் மான் இருந்த இடத்துக்குப் போயின. ஆமையும் பின்னாலே சென்றது. ‘மான் என்ன ஆனதோ!’ என்ற பயத்தில் ஆமை நகர்ந்து நகர்ந்து மான் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது.
காக்கை மேலே பறந்துபோய் வேடன் வருகிறானா என்று பார்த்தது. வேடன் கொஞ்ச தூரத்தில் வந்துகொண்டிருந்தான். உடனே, “அதோ வேடன் வருகிறான், சீக்கிரம் வேலை நடக்கட்டும்” என்றது காக்கை.
எலி வலையைப் பல்லால் கடித்தது. வலை அறுந்தது. மான் தப்பித்துக்கொண்டது.
வேடன் வருவதற்குள் மான் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது. வேடன் ஏமாந்துபோனான்! மான் தப்பி ஓடியது, எலி பக்கத்திலிருந்த பொந்துக்குள் ஓடி ஒளிந்துகொண்டது. காக்கை பறந்துபோய் மரத்தில் உட்கார்ந்துகொண்டது. ஆமையால் ஓட முடியுமா? அது மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது.
வேடன் ஆமையைப் பார்த்துவிட்டான். உடனே அதைப் பிடித்தான். ‘மான் கிடைக்கவில்லை. இந்த ஆமையாவது கிடைத்ததே. இதைச் சமைத்துச் சாப்பிடலாம்’ என்று நினைத்தான். ஆமையை வில்லுடன் சேர்த்து நன்றாகக் கட்டினான். தூக்கிக்கொண்டு நடந்தான்.
“ஐயோ, ஆமை வேடனிடம் மாட்டிக்கொண்டதே” என்று காக்கையும், எலியும், மானும் கவலைப்பட்டன. அப்போது, ஆமையைக் காப்பாற்றக் காக்கை ஒரு யோசனை சொன்னது. அது மிகவும் அருமையான யோசனை.
வேடன் போகும் வழியில் ஓர் ஏரி இருந்தது. அந்த ஏரிக் கரைக்குக் காக்கை, மான், எலி மூன்றும் சென்றன. வேடன் போவதற்கு முன்பே போய்விட்டன.
ஏரிக்கரையில் மான் செத்ததுபோலப் படுத்துக்கொண்டது. மானின் தலை மேலே காக்கை உட்கார்ந்துகொண்டது. முகத்தைக் கொத்துவது போல பாசாங்கு செய்தது. எலி சிறிது தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
வேடன் மானைப் பார்த்தான். ‘அட, இங்கே ஒரு மான் செத்துக்கிடக்கிறதே’ என்று நினைத்தான். உடனே கையில் இருந்த ஆமையை ஏரிக்கரையில் வைத்துவிட்டு, மானை நோக்கிப் போனான். வேடன் நெருங்கி வருவதைக் காக்கை பார்த்தது. உடனே ‘காகா...காகா...’ என்று கத்திக்கொண்டே மேலே பறந்தது. உடனே மான் சட்டென்று எழுந்தது. ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.
அதற்குள் ஏரிக்கரையில் இருந்த ஆமையிடம் எலி ஓடிவந்தது. ஆமையைக் கட்டியிருந்த கயிற்றை அவசர அவசமாகப் பல்லால் கடித்து, அறுத்தது. ஆமை தப்பித்துக்கொண்டது. பக்கத்திலிருந்த ஏரித் தண்ணீருக்குள் இறங்கி ஒளிந்துகொண்டது. எலியும் புதருக்குள் ஓடி மறைந்தது.
ஏமாந்துபோன வேடன் ஆமையை வைத்த இடத்துக்கு வந்தான். அங்கே ஆமையைக் காணோம். அறுந்த கயிறும் வில்லும்தான் கிடந்தன. ‘ஐயோ, மானுக்கு ஆசைப்பட்டேன். கையிலிருந்த ஆமையும் போய்விட்டதே’என்று வருந்தினான்.
மறுபடியும் நான்கு நண்பர்களும் ஒன்றாகக் கூடினார்கள்.
“புத்தி இருந்தால் பிழைத்துக்கொள்ளலாம்” என்றது காக்கை.
“ஒற்றுமையே பலம்” என்றது எலி.
“ஆமாம், ஆமாம்” என்று தலையை ஆட்டின ஆமையும் மானும்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.