தினம் ஒரு கதை - அடுத்த முறை உங்கள் மனைவி என்ன செய்கிறார்? என்று யாரேனும் உங்களிடம் கேட்டால் , அவள் வீட்டில் சும்மாதான் இருக்கிறாள் என்று கூறாமல் , அவள் எங்கள் வீட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறாள் என்று உண்மையான பெருமிதத்தோடு கூறுங்கள்

ஒரு கணவன் தன் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பினான். தன்னுடைய ஐந்து குழந்தைகளும் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்ததையும் அவர்கள் மிக அழுக்கான ஆடைகள் அணிந்திருந்ததையும் கண்டான். காலி உணவு டப்பாக்களும் குப்பைத்தாள்களும் தோட்டம் முழுக்க சிதறிக் கிடந்தன. 

அவனுடைய மனைவியின் கார் கதவு திறந்திருந்தது. வீட்டின் முன் வாசல் கதவும் திறந்திருந்தது. அவனுடைய வீட்டு நாயையும் அங்கு காணவில்லை. அவன் தன் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்த போது அதிர்ச்சியில் அவன் சிலையானான். 

சோபாக்கள் கவிழ்ந்து கிடந்தன. வரவேற்பறை கம்பளம் ஒரு மூலையில் சுருட்டி வீசப்பட்டிருந்தது. பார்க்க யாரும் இன்றி தொலைக்காட்சியில் ஏதோ ஒரு கார்ட்டூன் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகளின் படுக்கையறை நெடுகிலும் பொம்மைகளும் துணிகளும் சிதறி கிடந்தன. 

சமையலறையில் பாத்திரங்கள் கழுவப்படாமல் மலைபோல குவிந்து கிடந்தன. சமையலறை மேசையில் உணவு பதார்த்தங்கள் கொட்டி கிடந்தன. உடைந்த கண்ணாடி துண்டு ஒன்று மேசைக்கு அடியில் கிடந்தது. பின் வாசல் கதவருகில் ஒரு மண் குவியல் இருந்தது. தரையில் ஆங்காங்கே சிதறி கிடந்த துணிமணிகளும் பொம்மைகளும் தன்னை தடுக்கி விடாமல் பார்த்துக் கொண்டபடி கணவன் தன் மனைவியை தேடி வேக வேகமாக மாடிக்குச் சென்றான். 

அவளுக்கு ஏதோ மோசமான விடயம் நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லது அவளுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். 

இப்போது குளியலறைக்கு போனான்.தண்ணீர் வெளியே வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. லேசாக அந்த குளியல் அறைக்குள் எட்டிப் பார்த்தபோது ஈரத் துண்டுகளும் சோப்புகளும் தரை மீது அலங்கோலமாக கிடந்தன.  குளியலறை கண்ணாடி முழுவதும் பற்பசையால் கம்பி கோலம் இடப்பட்டு இருந்தது.

அவன்  படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்தபோது தன் மனைவி தங்கள் படுக்கையின் மீது படுத்தபடி ஒரு நாவலை படித்துக் கொண்டிருந்ததை அவன் கண்டான். 

அவனைக் கண்டதும் அவள் தன் புத்தகத்தை கீழே வைத்துவிட்டு அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு அவனுடைய அன்றைய நாள் எப்படி சென்றது? என்று அவனிடம் விசாரித்தாள். 

அவன் அவளை அதிர்ச்சியோடு பார்த்துவிட்டு இன்று என்ன நிகழ்ந்தது? என்று கேட்டான்.

அவள் மீண்டும் புன்னகைத்து விட்டு தினமும் நீங்கள் உங்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் போது இன்று நான் அப்படி என்னதான் வெட்டி முறித்தேன்? என்று நீங்கள் கேட்பீர்கள் இல்லையா? என்று கேட்டாள். 

ஆமாம் என்று அவன் பதில் அளித்தான். 

ஒரு மாற்றத்திற்காக இன்று நான் எதையும் வெட்டி முறிக்கவில்லை என்று அவள் கூறினாள். 

மேலோட்டமாக பார்க்கும் போது வேடிக்கையாக தோன்றினாலும் ஆழமான பொருள் கொண்டதாக இக்கதை இருக்கிறது.

ஒரு பெண்தான் ஒரு குடும்பத்தின் மையம். எல்லாமே அவளை சுற்றித்தான் இயங்குகின்றன. 

என் காலுறை எங்கே? என் பள்ளிச் சீருடை எங்கே? என் பெல்ட் எங்கே? என் கார் சாவி எங்கே? என் சாப்பாடு எங்கே? என பெரும்பாலான வீடுகளில் காலை நேரத்தில் இக்கேள்விகள் சரமாரியாக பறப்பதை நீங்கள் செவிமடுத்து இருக்க கூடும். 

வீட்டில் சும்மா இருக்கின்ற பெண்ணிடம் இந்த அனைத்து கேள்விகளுக்கான விடைகளும் இருக்கும். 

ஒன்றரை அல்லது இரண்டு வயதில் உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் ஒரு முறை அதற்கு உணவு ஊட்டி பாருங்கள். அதன் பிறகு நீங்கள் உங்கள் மனைவியை வழிபட தொடங்கிவிடுவீர்கள். 

அவள் குழந்தைக்கு உணவூட்டும் போது நீங்கள் அவளை கூர்ந்து கவனித்தால்  எப்படியாவது சாப்பிட வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவள் குழந்தையை கையாளும் போது அவளுடைய பல திறமைகளை அங்கே உங்களால் பார்க்க முடியும். 

வானத்தையும் நிலவையும் காட்டி வாய் திறக்கச் செய்து சிறிதளவு உணவை குழந்தையின் வாயினுள் வைத்து அதை தின்று விழுங்குவதை உறுதி செய்யும்போது அவளுடைய விடாமுயற்சியையும் பேச்சுத் திறமையையும் அவள் கையாளும் உத்திகளையும் உங்களால் பார்க்க முடியும். 

ஒட்டுமொத்தத்தில் ஒரு வியாபார உலகில் என்னென்ன திறமைகள் மெச்சப்படுகின்றனவோ அவை அனைத்தும் உங்கள் மனைவியிடம் இருப்பதை நீங்கள் அப்போது காண்பீர்கள். 

முன்னறிவிப்பின்றி ஒரு விருந்தினரை நீங்கள் உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தால் உங்கள் மனைவி ஏதோ மாயாஜாலம் செய்து ஒரு சில நிமிடங்களில் ஒரு சுவையான சிற்றுண்டி தயாரித்து , வந்திருக்கும் விருந்தினரை உபசரித்து விடுவாள். 

ஓர் இல்லத்தரசியின் திறமையையும், அறிவையும், சாமர்த்தியத்தையும் தயவு செய்து ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். 

வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் முக்கியத்துவத்தை நீங்கள் உதாசீனப்படுத்தும்போது தான் முக்கியமானவள் அல்ல. 

குடும்பத்திற்கு எந்த விதத்திலும் பயனுள்ள ஒரு பங்களிப்பை தான் வழங்கிக் கொண்டிருக்கவில்லை. 

வீட்டில் சும்மா இருக்கின்ற ஒரு மனைவிதான் என்று மெல்ல மெல்ல அவளும் நம்பத் தொடங்கி விடுவாள். 

இது உங்கள் மனைவிக்கும் நல்லதல்ல. உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் நல்லதல்ல. 

வேலைக்குச் செல்லும் ஒரு ஆணுடன் அல்லது ஒரு பெண்ணுடனும் ஒப்பிடுகையில் வேலைக்குப் போகாமல் வீட்டிலிருந்து குடும்பத்தை சிறப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்ற ஒரு பெண் எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல, முக்கியத்துவம் குன்றியவள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

எனவே அடுத்த முறை உங்கள் மனைவி என்ன செய்கிறார்? என்று யாரேனும் உங்களிடம் கேட்டால் , அவள் வீட்டில் சும்மாதான் இருக்கிறாள் என்று கூறாமல் , அவள் எங்கள் வீட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறாள் என்று உண்மையான பெருமிதத்தோடு கூறுங்கள். இதை நீங்கள் உங்கள் மனைவியின் காதுப்படக் கூறுவது அதை விட சிறந்தது.

Post a Comment

0 Comments