கலந்தாய்வுக்கு முன் டிரான்ஸ்பர் தாராளம் கல்வித்துறையில் இது புது டிரெண்ட் - தினமலர்

கல்வித்துறையில் மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டாலும் மே 31 ல் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் பணியிடத்தை குறிவைத்து தாராள 'டிரான்ஸ்பர்' உத்தரவுகள் வழங்கப்படுகின்றன.

மே 8 முதல் பணிமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடப்பதாக இருந்தது. ஆனால் பதவி உயர்வு வழங்கிய பின் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் எழுப்பின. இதையடுத்து கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.

மதுரை உட்பட சில மாவட்டங்களில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் அரசியல்ரீதியாக மறைமுகமாக 'சிங்கிள் டிரான்ஸ்பர்' உத்தரவு பெற்று காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக ஏப்.28ல் ஓய்வு பெற்றவர்களின் பணியிடங்களை குறிவைத்து 'லட்சங்களில் பேரம்' முடிந்து இந்த உத்தரவுகள் பெறுகின்றனர் எனவும் புகார் எழுந்துள்ளது.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

ஏப்.,28 ல் பணி ஓய்வு பெறுவோர் கல்வியாண்டு முடியும் வரை பணியில் நீடிக்க அனுமதியில்லை என அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மே 31 வரை அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

ஆனால் ஓய்வு பெறுவோரின் பணியிடங்களை குறிவைத்து அரசியல் ரீதியாக ஆசிரியர்கள் சிலர் சென்னையில் 'டிரான்ஸ்பர்' உத்தரவு பெற்று பிற மாவட்டங்களில் பணியில் சேருகின்றனர்.

மதுரையில் ஒரு பள்ளியில் மே 31 ல் ஓய்வு பெறும் ஆசிரியரின் பணியிடத்திற்கு மே 29 பணியில் சேரும் வகையில் ஆசிரியர் ஒருவருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன் இதுபோல் 'டிரான்ஸ்பர்'கள் வழங்கினால் கலந்தாய்வு நடத்துவது கண்துடைப்பிற்காகவா என கேள்வி எழுப்பினர்.

தினமலர் செய்தி

Post a Comment

0 Comments