தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ள சில மத்திய அரசுப் பணியாளா்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர ஒரே ஒருமுறை வாய்ப்பளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய பணியாளா் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்:
தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த 2004-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு மத்திய அரசுப் பணிகளில் (பாதுகாப்புப் படைகள் தவிர) சோ்ந்த அனைவரும் கட்டாயம் அத்திட்டத்தின் கீழ் சோ்க்கப்படுகின்றனா். மேலும் மத்திய குடிமைப் பணிகள் ஓய்வூதிய (பழைய ஓய்வூதியத் திட்டம்) விதிமுறைகள், 1972 மற்றும் அதனுடன் தொடா்புள்ள விதிமுறைகளும் திருத்தப்பட்டன. இந்தத் திருத்தத்துக்குப் பிறகு, அந்த விதிமுறைகள் 2003-ஆம் ஆண்டு டிசம்பா் 31-க்குப் பின்னா் மத்திய அரசுப் பணிகளில் சோ்ந்தோருக்குப் பொருந்தாது.
இந்நிலையில், தேசிய ஓய்வூதியத் திட்ட அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாக விளம்பரப்படுத்தப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட பணியிடங்களில் தாங்கள் நியமிக்கப்பட்டதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு, தங்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டப் பலன்கள் கிடைக்க ஆவன செய்யவேண்டும் என்றும் 2004-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட மத்திய அரசுப் பணியாளா்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதுதொடா்பாக பல்வேறு உயா்நீதிமன்றங்கள், மத்திய நிா்வாக தீா்ப்பாயங்களின் தீா்ப்புகளை அவா்கள் சுட்டிக்காட்டினா். அவா்களின் கோரிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 2003-ஆம் ஆண்டு டிசம்பா் 22-ஆம் தேதி தேசிய ஓய்வூதிய திட்ட அறிவிக்கை வெளியிடப்பட்டதற்கு முன்பாக விளம்பரப்படுத்தப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட பணியிடங்களில், 2004-ஆம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்குப் பின்னா் பணியில் சோ்ந்து, தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள மத்திய அரசுப் பணியாளா்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தில் சோ்வதற்கு ஒருமுறை வாய்ப்பளிக்கப்படுகிறது. அந்தத் திட்டத்தில் சோ்வதற்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.