*தினம் ஒரு கதை*
எழுதப் படிக்கத் தெரியாத ஒரு ஏழை. ஒரு மாதா கோயிலில் மணி அடிக்கும் வேலையை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறான். அந்த மாதா கோயிலுக்கு ஒரு புதிய பாதிரியார் வருகிறார். அவர் மணி அடிக்கும் ஆள் எழுதப்படிக்கத் தெரியாதவன் என்பதை அறிந்து, எழுத படிக்கத் தெரியாத ஒருவர் சர்ச்சில் வேலை செய்ய அனுமதி கிடையாது. உன்னை எப்படி வேலைக்கு சேர்த்தார்கள்? இன்னும் 15 நாள் உனக்கு அவகாசம் தருகிறேன். அதற்குள் நீ எழுத படிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் உன்னை சர்ச் வேலையில் இருந்து நீக்கம் செய்து விடுவேன் என்று எச்சரித்து அனுப்புகிறார்.
இரவு வீடு திரும்பிய அவன் தன் மனைவியிடம் பாதிரியார் சொன்னதை வருத்தத்துடன் கூறி இத்தனை வயதுக்கு பிறகு நான் எங்கிருந்து எழுத படிக்க கற்றுக் கொள்வேன்? அதுவும் 15 நாளில் முடிகிற காரியமா? என்று கூறி வருந்துகிறான்.
அவன் மனைவி ஆறுதல் கூறி வேறு வேலை ஏதாவது பாருங்களேன் என்கிறார்.
இந்த மணி அடிக்கும் வேலையைத் தவிர எனக்கு வேறு என்ன வேலை தெரியும் என்று வருத்தமுடன் சொல்லிக் கொண்டே இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே நடந்து சற்று தூரம் சென்றான். மன அமைதி பெறலாம் என்ற எண்ணத்தில் கால் போன போக்கில் நடந்தான். ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால் வழியில் கடை ஏதுமில்லை. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகே ஒரு கடை இருக்கிறது. அங்கு சென்று சிகரெட் பிடித்து விட்டு வீடு திரும்புகிறான். திரும்பும் வழியில் மீண்டும் ஒரு சிகரெட் பிடிக்க தோன்றுகிறது. ஆனால் திரும்பவும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும்.
இப்படி அவன் நினைத்த வேளையில் ஒரு யோசனை தோன்றுகிறது. இந்த ஒரு கிலோமீட்டர் தூர இடைவழியில் நாம் ஒரு சிறு கடை போட்டு சிகரெட் , பீடி விற்றால் என்ன? இந்த யோசனையில் மறுநாள் ஓரிடத்தில் தரையில் துணி விரித்து சிகரெட், பீடி தீப்பெட்டி ஆகியவஒற்றை விற்க தொடங்குகிறார். விரைவிலேயே அது ஒரு பெட்டி கடையாக வளர்ந்து பிறகு எல்லா பொருட்களும் விற்கும் டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆகி விடுகிறது.
பின்னர் நகரின் முக்கிய இடங்களில் அது கிளைகளை உண்டாக்கி அக்கம் பக்கத்து ஊர்களிலும் கிளை பரப்புகிறது. இப்போது அவன் குறிப்பிடத்தக்க கோடீஸ்வரர்களுள் ஒருவன். வங்கியில் அவன் பணம் கோடிக்கணக்கில் சேர்ந்திருக்கிறது.
அந்த வங்கிக்கு புதிதாக ஒரு மேனேஜர் வருகிறார். இவன் கணக்கில் ஏகப்பட்ட பணம் வெறுமனே முடங்கி கிடப்பது பார்த்து இதை அதிக வட்டி கிடைக்கும் திட்டங்களில் அவர் முதலீடு செய்யலாமே என்று கூறி அவனை வரவழைத்து விஷயத்தை சொல்கிறார்.
இவன் வங்கி மேனேஜரை பார்த்து எனக்கு வங்கியில் உள்ள முதலீட்டு திட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது. அதனால் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் சும்மா போட்டு வைத்திருக்கிறேன் என்கிறான்.
அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் இதோ இந்த விண்ணப்பத்தில் ஒரு கையெழுத்து மட்டும் போடுங்கள். மற்றதை வங்கி நிர்வாகம் பார்த்துக் கொள்ளும் என்கிறார் மேனேஜர்.
அவன் எனக்கு கையெழுத்துப் போடத் தெரியாது. நான் எழுதப் படிக்கத் தெரியாதவன் என்கிறான். மேனேஜர் ஆச்சரியத்துடன் என்ன உங்களுக்கு எழுத படிக்க தெரியாதா? எழுதப்படிக்கத் தெரியாமலே இவ்வளவு பணம் சம்பாதித்து இருக்கிறீர்களே இன்னும் எழுத படிக்க தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று சொன்னார்.
அவன் அமைதியாகச் சொன்னான் எழுத படிக்க தெரிந்திருந்தால் நான் மாதா கோவிலில் மணி அடித்துக் கொண்டிருப்பேன்.
இது உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் மாபாசான் அவர்கள் அவர்களுடைய ஒரு சிறுகதை.
*இந்த கதை உணர்த்தும் உண்மை*
தனக்கு மாதா கோயிலில் மணி அடிக்கும் வேலை போய்விட்டதே என்று மனம் குலைந்து போகாமல் அவன் உறுதியுடன் அடுத்த கட்ட வேலையில் ஆர்வத்துடன் இறங்கியது.
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இல்லை. சாதனைக்கான ஆதார சக்தி உங்களுக்குள்ளே எங்கோ ஒரு மூலையில் உறைந்து கிடக்கிறது. அதை தூண்டிவிட்டு எழச் செய்தால் நீங்கள் எதிர்பார்த்திராத அசுர உயரத்திற்கு உங்களை கொண்டு செல்லும் என்பதே நிதர்சனம்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.