பள்ளி வருகைப்பதிவில் தொடர்ந்து ஒரு மாணவன் பற்றி , வகுப்பில் கேட்கும்போது அவன் பள்ளிக்கே வரமாட்டான் என்ற பதில் மாணவர்களிடம் இருந்து வந்தது. ஏன் என்று காரணம் கேட்டபோது , " அவன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த கொஞ்ச நாளில் இருந்தே வர மாட்டான் டீச்சர் . கொரோனா வேற வந்துச்சா டீச்சர் ... அதனால் இப்பவும் அவன் வரமாட்டான் டீச்சர் ! " என்றது மாணவர்களின் குரல். " சரிப்பா நான் அவனைப் பார்த்துக் கொள்கிறேன் " என்று கூறி " நாம இப்போது பாடத்திற்குச் செல்வோம் " என்று எண்ணும் எழுத்தும் பாடப் பகுதியை மாணவர்களிடம் கொண்டுசென்றேன்.
அன்று முழுவதும் அவன் ஞாபகமாகவே இருந்தது. மாலை பள்ளி மணி ஒலித்ததும் முதல் வேலையாக அந்த பையன் வீட்டிற்கு விரைந்தேன். ஆனால் அவன் வீட்டில் இல்லை. பக்கத்து வீடுகளில் கேட்டபோது " அவன் எங்காவது விளையாடிக் கொண்டிருப்பான் " எனக் கூறி அனுப்பி விட்டார்கள். இப்படியாக மூன்று நாட்கள் தொடர்ந்தது. பின்னர் ஞாயிறு அன்று காலையிலேயே அவன் வீட்டிற்குச் சென்றேன். தூங்கிக் கொண்டிருந்தான் . அவனை எழுப்பி , " உனக்கு ஏன் பள்ளிக்கு வரப் பிடிக்கவில்லை ? " என்று கேட்டபோது , " எனக்கு எழுத , படிக்கப் பிடிக்கல டீச்சர். எனக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது.
பள்ளிக்கூடம் வந்தால் நீங்க படிக்கச் சொல்லுவீங்களாம் ; தெரியலன்னா அடிப்பீங்களாம் .... அதனால வரல டீச்சர் " என்றான். நான் யோசித்தேன் . " தம்பி , நீ பள்ளிக்கூடத்திற்கு வா . நான் உன்னைப் படிக்கவும் , எழுதவும் சொல்லமாட்டேன் . அடிக்கவும் மாட்டேன். ஒரு நாலு நாள் என்னோடு இரு. வகுப்பும் என்னையும் பிடித்திருந்தால் மீண்டும் பள்ளிக்கு வா . இல்லையென்றால் நீ வர வேண்டாம் " என்று கூறிவிட்டு வந்தேன்.
மறுநாள் பள்ளிக்கு நான் 8.45 மணிக்கு வந்தேன். அவன் எனக்கு முன்னதாகவே வகுப்பறைக்கு வந்துவிட்டான். எனக்குச் சந்தோஷம் . அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். அது அவனுக்கும் ஒரு சந்தோஷம். எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் உள்ள பாடல்கள் , செயல்பாடுகளாக வகுப்பறை சென்றது . அவனும் அனைத்திலும் சந்தோஷமாகக் கலந்து கொண்டான்.
எழுதக் கூறும்பொழுது , " உனக்குப் பிடித்திருந்தால் எழுது. இல்லையெனில் , வேண்டாம் " எனக் கூறினேன். ஒருநாள் கழித்து , " டீச்சர் நானும் எழுதறேன் " என்று எழுதவும் ஆரம்பித்தான். சிறிது நாட்களுக்கு முன்னர் அவனுக்குக் கண் வலி வந்தது. கண் வலி வந்தால் யாரும் பள்ளிக்கு வரவேண்டாம் என்று நான் கூறியிருந்தேன். ஆனாலும் அவன் வந்திருந்தான் . " ஏன்பா ... ஏன் வந்தாய் ? " எனக் கேட்டபோது , " டீச்சர் எனக்கு இந்த வகுப்பு பிடிச்சிருக்கு . உங்களையும் பிடிச்சிருக்கு. அதனால என்னால லீவு போட முடியல டீச்சர் " என்றான்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் பயிற்சிக்காக வெளியூர் செல்லவேண்டியதிருந்தது. மறுநாள் பள்ளிக்குச்சென்றேன். அன்று அவன் கேட்ட கேள்வி என்னை நெகிழ வைத்தது. " டீச்சர் , நான் உங்களைப் பார்க்கவும் படிக்கவும் பள்ளிக்கு வருகிறேன். ஆனால் நீங்கள் பள்ளிக்கு வரவில்லை. நான் உங்களை மிகவும் தேடுகிறேன் டீச்சர். லீவு போட்டா சொல்லுங்க டீச்சர் " என்றான். பள்ளியின் மீதான அவனது பாசம் இன்று வரை தொடர்கிறது.
பள்ளிக்கு முதல் மாணவனாக வருகிறான். அவனால் இயன்றதைப் படிக்கிறான். அவனுக்காகவே நான் விடுப்பு எடுப்பதைக் குறைத்துள்ளேன்.
- மா . மகேஸ்வரி ,
இடைநிலை ஆசிரியர்
நகர்மன்றப் பெருமாள்பட்டி நடுநிலைப்பள்ளி ,
திருவில்லிபுத்தூர் ,
விருதுநகர் மாவட்டம் .
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.