அசோக மன்னர் வந்து கொண்டிருந்தார். அவருடைய ஆலோசகர்கள் அருகில் வந்து கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் எதிரில் ஒரு புத்த பிக்கு வந்தார். அசோகர் பார்த்தார் ஓடிப் போய் அவர் காலில் விழுந்து வணங்கினார்.
அசோக மன்னரின் தலை அந்த புத்த துறவியின் பாதத்தில் பட்டு விட்டது. பக்கத்தில் நின்று கொண்டிருக்கிற அமைச்சருக்கு இது சங்கடமாய் போய்விட்டது. மிகவும் வருத்தப்பட்டார். நம் அசோகச் சக்கரவர்த்தி எப்பேர்பட்டவர் அவருடைய தலை ஒரு சன்யாசியின் பாதத்தில் படுவதா? என்று நினைத்து மிகவும் கவலைபட்டார்.
அரண்மனைக்குத் திரும்பியதும் அமைச்சர் மெதுவாக ஆரம்பித்தார். " அரசே எனக்கு மிகவும் வருத்தமாய் இருக்கிறது " என்றார்.
எதற்காக என்றார் மன்னர்.
அசோக சக்கரவர்த்தியின் சிரம் மதிப்பு மிக்க ஒன்று . அது ஒரு சந்நியாசியின் காலில் படுவதா? என்றார்.
அசோகர் பதில் சொல்லவில்லை. சிரித்தார் போய்விட்டார். அதன் பிறகு ஒரு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் அமைச்சரை கூப்பிட்டார் எனக்கு மூன்று சிரங்கள் அதாவது மூன்று தலைகள் வேண்டும் என்றார்.
சொல்லுங்கள் கொண்டு வருகிறேன் என்றார் அமைச்சர்.
அசோகர் சொன்னார் முதலாவது ஒரு ஆட்டின் தலை. இரண்டாவது ஒரு புலியின் தலை. மூன்றாவது ஒரு மனிதனின் தலை. இதுதான் அசோகர் கேட்டது. எங்கே இருந்தாலும் கொண்டு வாருங்கள் என்றார்.
அமைச்சர் புறப்பட்டார். ஆட்டுத்தலை, புலித்தலை கிடைத்துவிட்டது. அதன் பிறகு ஒரு சுடுகாட்டுக்கு போய் ஒரு மனித தலையும் சேகரித்துக் கொண்டு ராஜாவிடம் வந்து சேர்ந்தார்.
அரசே உங்கள் ஆணைப்படி மூன்று சிரசுகளை கொண்டு வந்திருக்கிறேன் என்றார்.
அசோகர் பார்த்தார் மிகவும் நல்லது. இப்போது இது மூன்றையும் எடுத்துக் கொண்டு போய் சந்தையில் விற்று விட்டு வாருங்கள் என்றார்.
அமைச்சர் அவர்கள் எடுத்துக்கொண்டு சந்தைக்கு போனார் முதலில் ஆட்டுத்தலை விற்றாயிற்று. நல்ல விலை கொடுத்து வாங்கி கொண்டு போனார்கள். அடுத்தபடியாக புலித்தலையை ஒருவர் வாங்கிக் கொண்டார். மனித தலையை மட்டும் வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை. எல்லோரும் பார்த்து விட்டு விலகி விலகி போனார்கள்.
அமைச்சர் திரும்பி வந்தார் அரசே இந்த தலையை மட்டும் யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்கள் என்றார்.
சரி பரவாயில்லை இதை இலவசமாகவே கொடுத்து விடுங்கள் என்றார்.
அமைச்சர் மறுபடியும் சந்தைக்கு போனார் இலவசமாக தருகிறேன் இதை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அப்போதும் யாரும் வாங்கவில்லை. மறுபடியும் திரும்பி வந்து மன்னரிடம் விஷயத்தை சொன்னார்.
இப்போது மன்னர் சொன்னார் அமைச்சரே உயிர் இருக்கிற வரைக்கும்தான் இந்த தலைக்கு மதிப்பு. உயிர் போன பிறகு அதன் மதிப்பும் போய்விடுகிறது. ஆகையினால் மதிப்பு இருக்கும்போதே பெரியவர்கள் பாதம் பணிந்து அந்த புனிதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
பணிவு என்பது வேறு. அடிமைத்தனம் என்பது வேறு.
பணிவது நமக்கு பெருமை தரக்கூடிய விஷயம்தான் இருப்பினும்
பணிவுக்கும் அடிமைத்தனத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதை புரிந்து கொண்டால் யார் காலில் விழ வேண்டும். யார் காலில் விழக்கூடாது. யாரை பணிய வேண்டும். என்பது தானாக புரிந்துவிடும்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.