தினம் ஒரு கதை - நாம் யார் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன

ஒரு அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்திற்குப் போகிறார்கள்.

விருந்திற்கு முன்பாக தேநீர் வழங்கப்படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது.

 அந்த சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதை பார்த்து , அழகான சீனக் கோப்பை இது. எவ்வாறு உடைந்தது ?, என ஆதங்கமாகக் கேட்டார்.

 *"எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது",* என அப்பா வருத்தமான குரலில் 
சொல்லவே,

 நண்பர் உடைந்த பீங்கான்களை அள்ளிக் கொண்டு சென்றார்.

இதைக்கண்ட மகன் அப்பாவிடம் கேட்டான்... *"உங்கள் கை கோப்பையில் படவே இல்லையே. பின் ஏன் நீங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டீர்கள்?".*

 "உண்மைதான். தேநீர் கோப்பையைக் கொண்டுவந்து வைத்தது நண்பரின் மகள்.

அவள் கவனமாக மேஜைமீது அதை வைக்கவில்லை.

ஆகவே தவறி விழுந்து விட்டது.

இந்த உண்மையைச் சொன்னால் நண்பர் ஏற்றுக்கொள்வாரா? நிச்சயம் என் மீது சந்தேகப்படவே செய்வார்.

அதற்குப் பதிலாக செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டுவிடுவதே சரி என நினைத்தேன்.

ஒருவேளை இந்த உண்மைக்கு நீ தான் சாட்சி என விளக்கி சொல்லியிருந்தால் அவர் மகளைக் கோபித்துக் கொண்டிருப்பார்.

அதன்பிறகு அவரது மகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும்.

மெல்ல எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடும்.

*"உறவுகளை உடை படாமல் காப்பாற்ற இப்படி சிறு பொய்கள் தேவைப்படவே செய்கின்றன".*

*அப்பாவின் முப்பதுஆண்டுகால அனுபவம் தான் அவரை இந்த முடிவு எடுக்க செய்திருக்கிறது*.

வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம் இது போன்றது தானே!

இதற்கு மாறாக சிலர் தங்களது சுயநலத்திற்காக குடும்ப உறவுகளை சிதைத்து கொள்வதுடன் மற்றவர்களின் சந்தோஷத்தையும் கெடுத்து விடுகிறார்கள்

உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது எளிது.

காப்பாற்றிக்கொள்வது எளிதல்ல.

விட்டுக் கொடுத்தலும், புரிதலும், அரவணைத்துப் போதலும் அத்தியாவசமானது.

நாம் யார் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன.
Key : Daily Story

Post a Comment

0 Comments