ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் பணத்தாசைப் பிடித்தவர்.
ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.
வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பினார். அப்போது அவரது மனைவி, உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க என்றாள்.
அதேப் போல் சோமன் அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.
அவர் காட்டு வழியில் வந்து கொண்டிருக்கும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று, தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார். பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.
அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் தட்டுப்பட்டது. அது என்னவென்று பார்த்தார். ஒரு பையில் நிறைய பணம் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலன் மனதில் முதலில் பணத்தை தொலைத்தவரை கண்டுபிடித்து அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்து ஊருக்கு விரைந்தார்.
ஊருக்குள் சென்று அங்கு இருந்த கடை வைத்திருந்த கடைக்காரரிடம் விசாரித்தார். அவர் உடனே சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்கள் இதைக் கொண்டுப்போய்க் கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.
உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொல்லி சோமனிடம் கொடுத்தார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை.
ஆனால் கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து, நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன் என்று கத்தினான்.
பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வேளையில் அந்த ஊர் கடைக்கார், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்தார். பூபாலன் ஒரு குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.
சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். நடந்த அனைத்தையும் கூறினான் சோமன்.
ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்ததுதான். அதனால் சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று சொல்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.
ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம்.
பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம். மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.
பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
நீதி :
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிட்டால் இருப்பதும் தொலைந்துப் போகும் நிலை வரும்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.