பட்டா மாறுதலுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கும் வசதி தமிழ்நாட்டில் அறிமுகம்!!!

      இனி ஈசியா பட்டா மாற்றலாம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23.9.2022) 

தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புற புல வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், வருவாய்த் துறை பணிகளை கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
பட்டா மாறுதலுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் வசதி
நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் (Common Service Centres) மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை இணையவழியில் பரிசீலிக்கப்பட்டு, பட்டாமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது, பொதுமக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி
 https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்கள் / பொதுசேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமிருக்காது, பொதுமக்கள் நில உட்பிரிவுக்கான கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments