தினம் ஒரு நீதிக்கதை

தினம் ஒரு நீதிக் கதை

விவேகமிக்க மந்திரி..! 

முன்னொரு காலத்தில் மகத நாட்டை குமரன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடன், விவேகமிக்க முத்து என்ற மந்திரி ஒருவர் இருந்தார். 

அரசர் குமரன், எங்கு சென்றாலும், முத்துவையும் அழைத்துச் செல்வார். முத்துவின் ஆலோசனை படியே அனைத்து காரியத்தையும் செய்வார். இதனால், மந்திரி முத்துவின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக் கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர்.

முத்து எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்டி அவரை அவமானப்படுத்த எண்ணினர்.

அவர்கள் அரசரிடம் சென்று மகாராஜா, மந்திரி நல்லவர் போல் நடித்து நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதை சோதனை செய்து பாருங்கள் என்று மந்திரியை பற்றி தவறாக கூறினார்கள்.

அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று அரசர் மந்திரியிடம் கேட்டார்.

உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது. இதெல்லாம் என்ன? என்று ஆச்சரியத்துடன் அரசர் கேட்டார். அதற்கு மந்திரி மன்னா! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து மந்திரி பதவியை அளித்தீர்கள்.

இவ்வளவு உயர் உதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன்.

அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னோடு வைத்திருக்கிறேன் என்று மந்திரி கூறினார். இதைக் கேட்டதும் அரசர் மனம் மகிழ்ந்து மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, மந்திரியை பற்றி தவறாக கூறிய பொறாமைக்காரர்களுக்கு தக்க தண்டனையும் அரசர் கொடுத்தார். மேலும், மந்திரிக்கு பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார்.

சூழ்ச்சியே, தங்களின் வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி அந்த பொறாமைக்காரர்களும் மனம் திருந்தி வருந்தினார்கள்.

நீதி : *பொறாமைக் கொள்ளும் எண்ணம் இருந்தால் நமக்கு என்றுமே தோல்வி தான் உண்டாகும்*.

Post a Comment

0 Comments