4,5 வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தக்கூடாது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள்.


தேசிய கல்விக் கொள்கையில் ஒரு பகுதியாக உள்ள மூன்றாவது, ஐந்தாவது மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பரவலாக விமர்சிக்கப்பட்டு எதிர்ப்புக்குள்ளாகி வரும் நிலையில் தற்போது தமிழக அரசு நான்கு, ஐந்து வகுப்பிலிருந்து மாவட்ட அளவிலான பொதுத்தேர்வு என்ற போர்வையில் மாநில முழுமைக்கும் ஒரே கேள்வித்தாள் கொண்ட பொதுத்தேர்வினை நடத்த துவங்கியுள்ளதை தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  கவலையோடு பார்க்கிறது.

கல்வித் துறையில் கல்வி சிறந்த  தமிழ்நாடாக ,பல்வேறு முற்போக்கான திட்டங்களின் மூலம் நடை போட துவங்கியுள்ள இந்த நிலையில் குழந்தைகளின் உரிமையை பாதிக்கும். குழந்தைகளின் இடை நிற்றலைக் கூட்டும், தன்னம்பிக்கையைக்  குறைக்கும் இந்த முயற்சியை கைவிட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

இந்நிலையில் மதிப்பீட்டு முறை சீர்திருத்தங்கள் தொடர்பான 20 ஆண்டுகால வரலாற்றினை நினைவு படுத்த தேவையாகிறது.

எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன் மாநிலங்களவையில் 1989- ல் பேசிய பேச்சு நாட்டை அதிரவைத்தது.

 மாணவர்கள் புரியாமையால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஏராளமானவை கற்பிக்கப்படுகின்றன. ஆனால், சிறிதளவே அவர்கள் கற்கின்றனர் என்றார் நாராயணன். 

பல வாரியங்களின் பாட நூல்களை எடை போட்டு சுமார் 6 முதல் 8 கிலோ வரையிலான பாடநூல்களையும் குறிப்பேடுகளையும் சுமப்பதாக விமர்சித்தார். அவர் புத்தகங்களின் உள்ளடக்கமும் சரி, மொழியும் சரி; குழந்தைமைக்கு ஏற்றதாக அமைய வேண்டும் என்றார். இதன் தொடர்ச்சியாகவே பேராசிரியர் யஷ்பால் தலைமையில் சுமையற்ற கற்றல் குழு அமைக்கப்பட்டு, பொருள் பொதிந்த சிறு அறிக்கையைச் சமர்ப்பித்தது.

யஷ்பால் குழுவின் (1993) வழிகாட்டலின்படியே தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது முதலில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர், அதன் வெற்றியைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் படிப்படியாக நடைமுறைக்கு வந்தது. இதில் 40% மதிப்பெண்களுக்கு மாணவர்களின் பல்வேறு தனித்திறன்களும் அவ்வப்போது நடத்தப்படும் தேர்வுகளின் தொகுப்பும் கணக்கில் கொள்ளப்பட்டன. 60% மதிப்பெண்களுக்கு பருவந்தோறும் நடைபெறும் தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. முதலில் இது ஆசிரியர்களுக்குப் பிடிபடவில்லை. இதன் நன்மைகளை உணர்ந்த பின்னரே அவர்கள் இந்தப் புதிய மதிப்பீட்டு முறையில் ஆர்வம்காட்டத் தொடங்கினர்.

கல்வி உரிமைச்சட்டம் - 2009, ‘ வரவில் தோன்றிய நம்பிக்கைக் கீற்றுகளில் இடைநிற்றலைக் குறைக்க எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பதாகும்.
 கல்வி உரிமைச் சட்டம் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்க வேண்டும்  என்று கூறியதே தவிர, மாணவர்களின் திறனடைவில் எவ்விதமான சமரசத்துக்கும் இடமளிக்கவில்லை. வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கும்போதுகூட, அந்த வயதுக்கான திறன்களைப் போதிக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறது. கல்வி முறையில் இத்தகைய ஆரோக்கியமான மாற்றங்களை முழுவதுமாக நடைமுறைப்படுத்தச் சிறிது காலம் பிடிக்கத்தான் செய்யும்.

10, 12 வகுப்புகளைப் போலவே  4,5, 8 வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தும் தமிழ்நாடு அரசின் முடிவு குழந்தைகளுக்குப் பெரிய பாரமாகவே இருக்கும். கற்றலில் அச்சத்தைக் கூட்டும். இடைநிற்றலை அதிகரிக்கும். சமூகத்தில் பல்வேறு பின்புலங்களிலிருந்து வரும் குழந்தைகள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரேவிதமான திறனடைவுகளை அடைய வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வாறு குழந்தைகளின் உரிமைக்கு ஆதரவான செயலாக இருக்கும்?

குழந்தைகள் அனைவரும் அவரவர்களின் கற்றல் வேகத்துக்கு ஏற்பவே கற்க இயலும். அவர்கள் பள்ளிக்கு வருவது பாடம் சார்ந்த திறன்களோடு சக மாணவர்களோடு கற்றலையும் ஊக்குவிக்க வேண்டும்

 இதற்காக குழந்தைகளை அவரவர் போக்கில் விட்டுவிட வேண்டும். மதிப்பீடு செய்யவே வேண்டாம். இதற்கு, ஆசிரியர்களை எதற்கும் பொறுப்பாக்கக் கூடாது என்று பொருள் அல்ல. பரவலாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ள கள யதார்த்தத்தை மனதில் கொண்டு குழந்தைமையைப் போற்றி வளர்க்க வேண்டிய பொறுப்பினை ஆசிரியர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆசிரியர்களைக் கூடுதலாக மேலாண்மை செய்து அவர்களின் முழுத் திறனையும் வெளிக்கொணர்ந்து பள்ளிக்கூடத்தைக் குழந்தைகள் விரும்பும் இடமாக மாற்ற வேண்டும்.

அதை விடுத்து, தேர்வினை மட்டுமே மையமாகக் கொண்டு பள்ளிகள் செயல்படத் தொடங்கினால் அதன் விளைவு ஒருபோதும் ஆரோக்கியமானதாக இருக்காது. நாம் ஒரு பெரும் கொடுமைக்குத் தயாராகிவிட்டிருக்கிறோம்; குழந்தைகளைக் கொடுமைக்குள்ளாக்கும்போது பல தலைமுறைகளுக்கு நீடிக்கும் கொடுமையாக அது மாறிவிடும் என்ற எச்சரிக்கையுணர்வு நமக்கு வேண்டும்!

இதனை கருத்தில் கொண்டு 4, 5 வகுப்பு முதலே பொதுத் தேர்வு நடத்தும் தற்போதைய முடிவைக் கைவிட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோருகிறது.

எஸ்.சுப்ரமணி,
மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

Post a Comment

0 Comments